முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் கிராமத்தில் துணுக்காய் பிரதேச சபையினால் கொட்டப்படும் கழிவு தொடர்பாக கிராம மக்களினால்முறைப்பாடுகள் செய்யப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.
வடமாகாண ஆளுநரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகன் அவர்களினதும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக நேற்று (29) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.உமாமகேஸ்வரன் தலைமையில் உத்தியோகத்தர்கள் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு ஆராயப்பட்டு அதற்கான நிரந்தர தீர்வுகள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக துணுக்காய் பிரதேச சபையினால் 10 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள மாடு "கொல்களம்" திண்மக்கழிவுகள், திரவக்கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் கொட்டுதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.இதற்கான காணியினை 2015 ஆம் ஆண்டு துணுக்காய் பிரதேச செயலாளர் திண்மக்கழிவகற்றல் இடத்திற்காக வழங்கியிருந்தார்.
தற்போது பிரதேச சபைக்குட்பட்ட மலக்கழிவுகளை அகற்ற முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளதாகவும் மலக்கழிவு கொட்டப்பட்டு வந்த இடத்தில் தற்போது மலக்கழிவினை கொட்ட முடியாமல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அவர்களால் இதன் போது அரசாங்க அதிபரிடம் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் குறித்த கழிவு கொட்டும் பகுதியில் கொட்டப்பட்ட மலக்கழிவுகள் , ஏனைய திண்மக் கழிவுகள், இறந்த மாடுகளின் உடல்கள் அருகில் உள்ள மக்களின் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு அசுத்தத்தை ஏற்படுத்தியது .
இதனால் குறித்த பகுதியில் மலக் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்தக் கோரி அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் பிரதேச செயலாளரிடமும் முறையிட்டனர். இதற்கு பிரதேச செயலாளர் குறித்த பகுதியில் மலக் கழிவுகளை கொட்டுவதற்கு தடைவிதித்ததுடன் மாற்றுக் காணியினை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முக்கிய பிரச்சினையாக பேசப்பட்ட போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் ஓரிரு நாட்களுக்குள் நேரில் வந்து பார்வையிட்டு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை மேற்காள்ளப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்
இதற்கமைய இன்றைய தினம்(29) மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து நிலமையை நேரில் பார்வையிட்டு சர்ச்சைக்குரிய நிரந்தர தீர்வு தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது..
முன்னர் திண்மக்கழிவுக்களை கொட்டுவதற்காக வழங்கப்பட்ட 10 ஏக்கர் காணியில் மாடு கொல்களம் மற்றும் திண்மக் கழிவுகளை மட்டும் கொட்டுவதற்கு பயன்படுத்துவது எனவும் குறித்த பகுதி முற்றாக பற்றைகளாக காணப்படுவதனால் அதனை சுத்தமாகப் பேணுவதற்கும். இதற்கான நிதி ஏற்பாடுகளை பெறுவது தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது..
ஏனைய திரவக் கழிவுகள் மற்றும் மலக்கழிவுகளை கொட்டுவதற்கு கல்விளான் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களில் இருந்து சுமார் 6KM தூரத்தில் வளவளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் வனவளத்திணைக்களத்தின் அனுமதியை பெறுவது தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது..
இந்த கள விஜயத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன், துணுக்காய் பிரதேச செயலாளர் ரமேஸ், துணுக்காய் பிரதேசசபை தவிசாளர் செந்தூரன், உப தவிசாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், வட்டார வனவள அதிகாரி, பிரதேசசபை உறுப்பினர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.


