ஊழியர்களின் தொழிலைப் பாதுகாத்து மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
இலங்கை மின் சக்தி சட்டத் திருத்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்காக இன்று (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
மின்சார சபையின் 23 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டு வருவதுடன், மின்சார சபையில் இடம் பெறும் மறு சீரமைப்பின் கீழ் அந்த சகல ஊழியர்களும் இந்த நிறுவனத்தில் நான்கிற்கு இணைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் அந்த நிறுவனம் 100% அரசாங்கத்திடம் காணப்படும் பொதுத் திறைசேரி யின் கம்பனி என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது சகல ஊழியர்களுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர்; எந்த ஒரு ஊழியரும் இந்த நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டு பணியாற்றுவதற்கு விரும்பாவிட்டால் அவர்கள் தமது விருப்பப்படி சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது ஒரு சட்டபூர்வ தேவை என்றும், அரசாங்கம் இலங்கை மின்சார சபை அல்லது அமைச்சின் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு முயற்சிக்கவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அமைச்சர் தொடர்ந்து கூறியதாவது, நாம் இந்த திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், இந்த செயற்பாடுகள் காணப்பட்ட முறையில் அமையுமாயின், ஆகஸ்ட் 17ஆம் திகதியின் பின்னர், இலங்கை மின்சார சபையின் 12,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அது முன்னை அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானமாக கிடைத்த ஒன்று, அதுபோல் இலங்கை மின்சார சபையை 12 நிறுவனங்களாகப் பிரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனால் சகலருக்கும் இந்த நிலை தேவைதானா? என நான் இந்த ஊழியர்களிடம் கேட்க விரும்புகிறேன். நாம் மக்களின் அரசாங்கமாக இவ்வாறு உள்ள சகல ஊழியர்களுக்கும் பொறுப்புக் கூறுவோம். நாட்டின் வலுசக்தி பாதுகாப்பிற்காக அவசியமான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.


