உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் வாக்கெடுப்பு இன்று (24) ஆரம்பமாகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், நாளை (25) மற்றும் 28, 29 ஆம் திகதிகளிலும் அஞ்சல் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படையினர், பாடசாலைகள், கூட்டுத்தாபணங்கள், நியதிச்சட்ட சபைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் அஞ்சல் வாக்குரிமைக்கு தகுதிபெற்ற வாக்காளர்கள் அனைவருக்கும் இந்த நான்கு நாட்களிலும் தமது அஞ்சல் வாக்கைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தலதா வழிபாட்டில் விசேட கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்காக விசேட அஞ்சல் வாக்களிப்பு நிலையம் ஒன்று கண்டியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.