நாட்டின் தேங்காய் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளூரில் தேங்காய் உற்பத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் கீழ், 2025-2026 ஆண்டுகளில் 40,000 ஏக்கர் தென்னைகளை பயிரிட எதிர்பார்க்கப்படுவதாக தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு வவுனியா மாவட்டத்தில் 1,116 ஏக்கர் பரப்பளவில் 1,07,116 தென்னை மரங்களை நடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்திச் சபையின் வவுனியா பிராந்திய பணிப்பாளர் தாசுன் மஞ்சுலா குறிப்பிட்டார்.
மேலும், வீட்டுத் தோட்டத் தென்னை சாகுபடித் திட்டத்தின் கீழ், எதிர்காலத்தில் 71,492 தென்னங் கன்றுகள் பயிரிடப்படுவதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீட்டுத் தோட்டத்தில் 15 தென்னங் கன்றுகளை நடுவதற்குத் தேவையான கன்றுகள் மற்றும் வழிமுறைகளை தென்னை அபிவிருத்தி சபை வழங்கவுள்ளது.
முறையான தேங்காய் சாகுபடிக்காக 1/4 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரையிலான பரப்பளவில் தேங்காய் பயிரிட உதவி வழங்கப்படுகிறது. அதன்படி, நீர் விநியோக அமைப்பை அமைப்பதற்காக ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிதி உதவி. வழங்கப்படுகிறது.
தென்னை சாகுபடியை பூச்சிகளிலிருந்து பாதுகாக்கவும், தேங்காய் விளைச்சலை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கு ஆலோசனை சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா பிராந்தியப் பணிப்பாளர் சதூன் மஞ்சுளா தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.