வெசாக் தினத்தை முன்னிட்டு அதன் ஆரம்ப நிகழ்வுகள் மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றன.
மட்டக்களப்பிலுள்ள மங்கலாராமய விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட மத வழிபாடுகள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் பெருமளவான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், வெசாக் அலங்காரங்களையும் பார்வையிட்டனர்.
மேலும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடுகள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.எம்.யூ.பிரதீப் களுப்பான, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, சர்வமத தலைவர்கள் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். வண்ணமயமான மின்விளக்கு அலங்காரங்களால் அமைக்கப்பட்டிருந்த இக்கூடுகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
மங்கலாராமய விகாரையில் நடைபெற்ற நிகழ்வுகள் விகாராதிபதி வணக்கத்திற்குரிய அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் தலைமையில் நடைபெற்றதுடன், மத அனுஷ்டானங்கள் மற்றும் ஆசீர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வெசாக் வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு மத, கலாசார மற்றும் (தாகசாந்தி) சமூக நிகழ்வுகள் நேற்றைய தினத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது.


