கொரிய குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கொரிய குடியரசின் தூதுவர் மியான் லீ மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், பிரபல கொரிய பிராண்டுகளை இலங்கையில் முதலீடு செய்ய அமைச்சர் ஹந்துன்நெத்தி அழைப்பு விடுத்தார், மேலும் கைத்தொழில் அமைச்சு தலைமையிலான அரசாங்கம் அந்த முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.
கொரியாவில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் Corporate Bank System (கூட்டுறவு வங்கி முறையை) பாராட்டிய அமைச்சர் சுனில் ஹந்துன்நேதி, விவசாயம் மற்றும் உற்பத்தித் தொழில்களை ஒருங்கிணைத்து இலங்கையில் அத்தகைய கூட்டுறவு வங்கி முறையை நிறுவுவதற்கு கொரிய குடியரசின் ஆதரவைக் கோரினார்.
இதற்கு மிகவும் சாதகமாக பதிலளித்த கொரிய குடியரசின் தூதுவர் மியான் லீ, தனது நாட்டில் செயல்படுத்தப்பட்ட கூட்டுறவு வங்கி முறை கொரிய பொருளாதாரம் அதன் தற்போதைய உயர் நிலையை எட்டுவதற்கு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கியுள்ளது என்றும், இலங்கையிலும் அத்தகைய வங்கி முறையை நிறுவ தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் கூறினார்.
கொரியக் குடியரசின் மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைத்து வருவதில் அவர் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார், மேலும் அத் துறைகளில் பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்து அந்த தயாரிப்புகளை தெற்காசிய சந்தைக்கு அனுப்பும் வாய்ப்பு குறித்தும் கவனத்தை ஈர்த்தார்.