யான் ஓயா நீர்த்தேக்க நிர்மாணத்தால் வயல் காணிகள் இழக்கப்பட்ட 245 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று வயல் காணிகளுக்குப் பதிலாக மேலதிக நட்டஈடு

யான் ஓயா நீர்த்தேக்க நிர்மாணத்தால் வயல் காணிகள் இழக்கப்பட்ட 245 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாற்று வயல் காணிகளுக்குப் பதிலாக மேலதிக நட்டஈடு
  • :

அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்குரிய 11,500 ஏக்கர் வயல் நிலங்களுக்கு பெரும்போகம் மற்றும் சிறுபோகச் செய்கைகளுக்கு நீர் விநியோகிக்கும் நோக்கில், 169 மில்லியன் கனமீற்றர் கொள்ளவுடன் கூடிய யான் ஓயா நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தை நிர்மாணிக்கும் போது சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் அரச விலைமதிப்பீட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நீர்த்தேக்கக் கருத்திட்டத்தால் அநுராதபுரம் மாவட்டத்தின் ஹொறொவபொத்தான பிரதேச செயலகப் பிரிவில் வயல் காணிகள் இழக்கப்பட்ட குடும்பங்களுக்க 313 மாற்று வயல் காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், தெரிவு செய்யப்பட்டுள்ள 614 குடும்பங்களுக்கு மாற்று வயல் காணிகளுக்குப் பதிலாக மேலதிக நட்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கு 2024.03.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஹொறொவபொத்தான பிரதேச செயலாளரால் மேலதிக இழப்பீடு வழங்குவதற்குப் பொருத்தமான 540 குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டு, அவர்களுக்கான நட்டஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்று வயல் காணிகளை வழங்குவதற்கான இயலுமை இன்மையால், நட்டஈட்டுத் தொகைக்கு உரித்துடைய மேலும் 245 குடும்பங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

அத்துடன், அரச பிரதம விலைமதிப்பீட்டாளரால் பாசன நீர் மூலம் பெரும்போகம் மற்றும் சிறுபோகம் இரண்டு செய்கைகளுக்கான ஒன்றரை ஏக்கர் (1 ½) வயல்காணிக்கான பெறுமதி 1,800,000/- ரூபாய்களென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேலும் அடையாளங் காணப்பட்டுள்ள 245 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு 1,800,000/- ரூபா வீதம் மேலதிக நட்டஈட்டுத் தொகையைச் செலுத்துவதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles