அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகள்
  • :

கிளிநொச்சி மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06) கண்டாவளை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் திரு. த. பிருந்தாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ‘டித்வா’ புயல் தாக்கத்தினால் கற்றல் பாதிப்பிற்குள்ளான மாணவர்களுக்குரிய கொடுப்பனவுகள், முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த குடியிருப்பாளர்களின் வீடுகளைப் புனரமைப்பதற்கான நிதி உதவிகள் மற்றும் தொழில்துறையில் பாதிக்கப்பட்ட முயற்சியாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் ஆரம்பகட்ட நிகழ்வாக இது அமைந்தது.

நாட்டை புரட்டிப்போட்ட ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் ரூ. 10,000 கொடுப்பனவுக்காக ரூ. 1,925,010,000.00 (சுமார் ரூ. 192 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

குறித்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக, அரசாங்கத்தினால் ஒரு மாணவருக்கு மொத்தமாக ரூ. 25,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 மற்றும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ. 10,000 வழங்கப்படுகின்றன.

இதற்கமைவாக, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ரூ. 10,000 காசோலை இன்று கண்டாவளை பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டது. 

ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தில் 6,081 மாணவர்களுக்கு திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட ரூ. 15,000 நிதி கடந்த வருட இறுதியில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனாதிபதி செயலகத்தினால் மாணவர் ஒருவருக்கு ரூ. 10,000 வீதம் 6,081 மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய ஆரம்ப நிகழ்வில் 300 மாணவர்களுக்கு குறித்த நிதி வழங்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக ஏனைய மாணவர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்குகளில் குறித்த தொகை வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், வெள்ளத்தால் தொழில்முயற்சியில் பாதிக்கப்பட்ட 71 முயற்சியாளர்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஆரம்பக்கட்ட இழப்பீடு இன்று கண்டாவளை பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டது. 

மாவட்டத்தில் உள்ள ஏனைய முயற்சியாளர்களுக்கான நிதியும் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வீடு சேதமடைந்த 977 குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நிகழ்வில் வீடுகளைப் புனரமைப்பதற்கான முதல் கட்ட நிதியான ரூ. 3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. 

அதன்படி பயனாளி ஒருவருக்கு முதல்கட்டமாக ரூ. 3 லட்சம் காசோலை இன்றைய நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

இதேபோல், மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பயனாளிகளுக்கும் புனரமைப்பிற்கான நிதி விரைவில் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

Related Articles