மட்டக்களப்பில் சுகாதார மற்றும் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. ஆர்.எச்.எம்.பி. அபேகோன் பங்கு பற்றுதலுடன் புதிய மாட்ட செயலகத்தில் நேற்று (20) இடம் பெற்றது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) நிதி அனுசரணையில் சுகாதார திண்ம கழிவுகளை அகற்றும் செயற்திட்டம் மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன் ஒர் அங்கமாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கரடியனாறு வைத்தியசாலையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சுகாதார திண்ம கழிவு முகாமைத்துவ நிலையம் நிறுவப்படவுள்ளது.
வைத்திய சாலைகளின் இரசாயன மற்றும் சுகாதார திண்மக்கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதற்கு பாரிய சவால் காணப்பட்ட நிலையில் புதிய திண்ம கழிவு முகாமைத்துவ நிலையத்தினூடாக வளி மாசடையாத வகையில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும் மாவட்டத்தில் கொடுவாமடு பிரதேசத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


