இலங்கை பரீட்சைத் திணைக்களம் தேசிய ரீதியிலான பரீட்சைகள் உள்ளிட்ட 300 பரீட்சைகளுக்கும் அதிகமாக வரடாந்தம் நடாத்தி வருவதுடன், குறித்த பரீட்சைகள் அனைத்தின் தரவுகள் மற்றும் தொழிற்பாடுகள் பற்றிய முக்கிய பணிகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு கணணி முகாமைத்துவ தகவல் முறைமையொன்று பயன்படுத்தப்படுகின்றது.
குறித்த திணைக்களத்தின் தொழிற்பாட்டுப் பணிகள், ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தனித்துவமான கணணி வலையமைப்பாகக் காணப்படுவதால் பரீட்சை செயன்முறையில் பெரும்பாலான அத்தியாவசியப் படிமுறைகள், மனித வளங்களை மாத்திரம் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், தரவுகள் மற்றும் பதிவேடுகள் பௌதீக ரீதியாக கிளைகளுக்கிடையே மாற்றப்படுகின்றது. அதனால், வினைத்திறன் குறைவடைதல், தாதங்கள் ஏற்படுதல், பௌதீக மற்றும் மனித வளங்கள் விரயமாதல் இடம்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால், தற்போது அமுல்படுத்தப்படும் அரச துறையின் சேவைகள் டிஜிட்டல்மயப்படுத்தும் செயன்முறைக்கமைய பரீட்சைத் திணைக்களத்தின் கணணி வலையமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தரமுயர்த்துவது முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அனைத்து கிளைகளையும் உள்ளடக்கியவாறு விரிவான கணணி வலையமைப்பைத் திட்டமிடல், நிறுவுதல் மற்றும் அமுல்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


