அரசியல் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி பலவந்தமாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமாக காணிகளை கையகப்படுத்தல், சட்டவிரோதமாக காணிகளை நிரப்புதல் மற்றும் கடலோரங்களில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் காரணமாக கிழக்கு மாகாணத்தில் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
இந்நிலைமையால் அப்பிரதேசங்களின் இயற்கைச் சூழல் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், இவ்வாறான முறையற்றதும் சட்டவிரோதமானதுமான மனித செயற்பாடுகளால் ஒட்டுமொத்த கிழக்கு மாகாண கடற்கரையோரமும் மோசமான கடலரிப்புக்கள் அதிகரித்து வருகின்றது. அத்துடன், சிவில் யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்திருப்பினும், இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக மீளக்குடியமர்த்துவதில் முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படாமையாலும், மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் போது அளவுகோல்களைக் கடைப்பிடிக்காமையாலும் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் நேரடியான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இப்பிரச்சினைகளுக்குத் துரிதமானதும் நிரந்தரமானதுமான தீர்வுகளைக் கண்டறிதல், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் நிறுவன ரீதியான ஒருங்கிணைப்புக்களைப் பலப்படுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள கீழ்வரும் யோசனைகளை அமுல்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
'கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல்' எனும் பெயரிலான தென்மாகாண முன்னாள் காணி ஆணையாளர் மற்றும் தற்போதைய தென்மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், சேனக பல்லியகுருகே அவர்களின் தலைமையில், ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்றை நியமித்தல்
பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசேட அலகொன்றை உடனடியாக நிறுவுதல் மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோதமாகக் காணிகளைக் கையகப்படுத்தல் மற்றும் நிரப்புதல் போன்றவற்றை நிறுத்துவதற்காக பாதுகாப்புப் பிரிவினருக்கு முழுமையான அதிகாரத்தை வழங்குதல்
இலங்கை மகாவலி அதிகாரசபையால் 05 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு முன்னர் வர்த்தகப் பெறுமதியுடன் வழங்கப்பட்டுள்ளதும், ஆனாலும் இதுவரை எவ்வித கருத்திட்டங்களையும் ஆரம்பிக்காதுள்ள காணிகளை உடனடியாக அரசுக்கு எடுத்தல்;
அவ்வாறு எடுக்கப்படுகின்ற காணிகளை பிரதேச செயலாளர்களுக்கு பாரப்படுத்தி முறைசார்ந்த வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச மக்களுக்கு அபிவிருத்திக்காக வழங்குதல்
கிழக்குக் கரையோரங்களில் காணப்படுகின்ற உச்ச ஆற்றல்வளங்களைப் பயன்படுத்தி, கடலோரச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு துரிதமான முறையான திட்டத்தைத் தயாரித்தல்
கிழக்குக் கரையோரப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் ஹோட்டல்களை நடாத்திச் செல்லும் போது அரச ஊழியர்கள் பக்கச்சார்பின்றியும் வெளிப்படைத்தன்மையுடனும் சட்டம் அமுல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துகின்ற பொறிமுறையைத் தயாரித்தல்


