ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்பாடு குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்பாடு குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்
  • :

தற்போது வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் Clean Sri Lanka செயலகத்தின் வழிகாட்டலில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடு, இம்மாதம் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குப் பொதுமக்களின் விழிப்புணர்வும் பங்களிப்பும் இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், இதில் ஊடக நிறுவனங்களுக்குப் பரந்தளவிலான பொறுப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போதைய மழை காலத்துடன், டெங்கு பரவல் கடந்த வருடத்தை விட அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், இந்தத் தொற்றுநோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நிலையான தீர்வுகளைக் காண்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களுக்கும் அதிக பொறுப்பு காணப்படுவதாகவும், சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது போன்ற நற்பழக்க வழக்கங்களின் மூலம் இந்நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரச நிறுவன வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களைச் சூழவும் டெங்கு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டார்.

ஏற்பட்டுள்ள இந்தச் பிரச்சினைக்கு இந்த நேரத்தில் வழங்கக்கூடிய மிகச் சிறந்த தீர்வு, பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதும் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்க அவர்களை ஊக்குவிப்பதுமே ஆகும் என மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பரந்தளவிலான பிரச்சாரப் பொறிமுறையொன்றைச் செயல்படுத்துவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டி, சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்து அவர்களை ஊக்குவிப்பதற்குத் தங்களது பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டார்.

டெங்கு பரவல், ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை மற்றும் இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் குறித்து சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இங்கு விளக்கமளித்தார்.

தேசிய செயற்பாடாகக் கருதி இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு தங்களது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இங்கு குறிப்பிட்ட ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், டெங்கு ஒழிப்பு தொடர்பான தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன்வைத்தனர்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேநாதீர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ('Clean Sri Lanka') எஸ்.பி.சி. சுகீஷ்வர ஆகியோருடன் கல்வி அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Articles