கம்பஹா மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு விசேட ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகேயின் ஆலோசனைக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக வீடுகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கை இன்று காலை 8 மணிக்கு மாவட்ட செயலாளர் லலிந்த காமகே யினால் கம்பஹா பெண்டியமுல்ல பிரதேசத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கம்பஹா உதவிப் பிரதேச செயலாளர் உபேக்ஷா கபுருபண்டார, நகர சபை சுகாதார பிரிவு மற்றும் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள், பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள கிராமமட்ட அதிகாரிகள் ( கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்) விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சன சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்
தற்போதைய காலநிலையினை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய டெங்கு அபாயத்தை குறைக்கும் நோக்கில், மேற்கொள்ளப்படும் இந்த விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று (21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுற்றது.
கம்பஹா மாவட்டத்தின் 1177 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தது 50 வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் வீட்டில் வசிப்பவர்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதற்கிணங்க கம்பஹா மாவட்டத்தில் 60,000 வீடுகள் ஒரே நாளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.