கரும்பு பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்..

கரும்பு பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்..
  • :

கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அக்கராயன் பகுதியில் கரும்பு உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொண்டு, உள்ளூர் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மூலப்பொருள் கரும்பை நிலையான முறையில் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட கலந்துரையாடல், நச்சுரல் ரூட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் 12.03.2026 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், அக்கராயன் பகுதியில் ஏற்கனவே விவசாய நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கரும்புத்தோட்டப் பகுதியில் 20 ஏக்கர் நிலப்பரப்பிலும், ஸ்கந்தபுரம் ஏற்று நீர்ப்பாசனப் பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பிலும் கரும்பு பயிர்ச்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

மேலும், குறித்த பகுதிகளுக்கான நீர்ப்பாசன தேவைகளை ஒழுங்குபடுத்தி மேற்பார்வை செய்வதற்காக நீர்ப்பாசனத் திணைக்களம் பொறுப்பேற்க ஒப்புதல் அளித்ததுடன், கரும்பு பயிர்ச்செய்கைக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கும், அறுவடை செய்யப்பட்ட கரும்பை பயனாளிகளிடமிருந்து நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கும் நச்சுரல் ரூட்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்தது.

இதனுடன் தொடர்புடையதாக, விரைவில் செய்கைக்கு உகந்த இடங்களைத் தேர்வு செய்வதும், பயனாளர்களைத் தெரிவு செய்வதும் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையில் உத்தியோகபூர்வ ஒப்பந்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

கரும்பு பயிர்ச்செய்கை ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடியதோடு, காலநிலைச் சவால்களின் தாக்கம் குறைவாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இப்பயிர்ச்செய்கையை மேற்கொள்வது பயனுள்ளதாக அமையும் என கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

Related Articles