கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் நேற்று (13) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன, துறைசார் திணைக்கள பணிப்பாளர்கள், செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
குறித்த கூட்டத்தின் போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை ஆனது பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
குறிப்பாக நேற்றைய தினம் இலங்கைக்கான 768 விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார் இதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 வீதம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் ஏற்பட்ட குறித்த சூழ்நிலையில் இருந்து மீண்டு எழுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் கூடிய விரைவில் இந்த நிலைமை சீர் செய்யப்பட்டு சுமூகமான நிலைக்கு நாடு திருப்பமடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
2026 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலே முன்னெடுக்கப்பட இருக்கின்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான திட்ட வடிவமைப்புகள் குறித்து இன்றைய தினம் ஆராயப்பட்டதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் விசேடமாக திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட இருக்கின்ற சுற்றுலா அபிவிருத்தி சார்ந்த வேலை திட்டங்கள் குறித்தும் அதற்கான முதலீடுகள் மற்றும் காணி ஒதுக்கீடு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அவர் இதன் போது தெரிவித்தார்.
குறிப்பாக காணிகள் ஒதுக்கீடு தொடர்பான வேறு அரச திணைக்களங்களது அனுமதிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


