திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக அறுவடைக்கான 58 ஆவது வருட புத்தரசி விழா நேற்று ( 27) உப்புவெளி கமநல சேவைகள் உத்தியோகத்தர் து. தர்சானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் என். விஸ்ணுதாசன் தலைமையில் உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக ஓய்வு நிலை இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தரும் கமநல நியாயசபை நீதிபதியும் கே.பி.கெட்டியாராச்சி மற்றும் சிறப்பு விருந்தினராக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி த.வருணி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இதன் போது, திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் அறுவடையை கௌரவிக்கும் முகமாக சட்டிகளில் அரிசி வைக்கப்பட்டு, அவை தேசிய மட்ட புத்தரிசி விழாவுக்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்ட பிரதான பாத்திரத்தில் இடப்பட்டது.
புத்த பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் நான்காம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்காக மாவட்ட ரீதியாக புத்தரிசி வழங்குவதற்கான விழா பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வமத தலைவர்களின் பங்குபற்றலுடன் இவ்விழாவானது மிகவும் கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு பரிசில்களும் , அதிகாரிகளுக்கு நினைவு சின்னங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இவ்விழாவில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர், கமக்கார அமைப்புக்களின் தலைவர்கள்,
நீர்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், கமநல காப்புறுதி சபை உத்தியோகத்தர், 22 கமநல சேவைகள் நிலையங்களினதும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.