இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்று (04.02.2024) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதை ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மத தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் யாழ்ப்பாணம் சென் பெனடிக்ற் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் 51 பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.