கிளிநொச்சி மாவட்டத்திலே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் 3,865பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நேற்று (23) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்திலே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் கரைச்சி பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில் மூன்று பிரதேச சபைகளுக்குமாக 66 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக 659 பேர் போட்டியிடுகின்றனர். மேலும், எங்களது மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களாக 102381 பேர் காணப்படுகின்றனர்.
இவர்களுள் 3,865 அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலமான வாக்களிப்புக்கு விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்கான வாக்களிப்புகள் 23, 24 மற்றும் 28, 29ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இதற்காக மாவட்டத்தில் 96 நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இதற்கப்பால் மாவட்டத்தில் இதுவரை 9 தேர்தல் விதிமுறைமீறல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.