உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு வெற்றி ஆண்டில் ஒரு மக்கள் அரசாங்கத்தின் கீழ் 139வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.
எழுபத்தைந்து ஆண்டுகளாக ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நின்று ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் அரசாங்கத்தின் கீழ், இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது ஒரு வரலாற்று மைற்கல்லைக் குறிக்கிறது.
குழுவாதம், அரசியல் பக்கச்சார்புகள் மற்றும் உறவினர்களுக்குச் சலுகை அளித்தல் போன்றவற்றால் அநீதிக்குள்ளான உழைக்கும் மக்கள், 2024 ஆம் ஆண்டில் இந்த முழு அரசியல் கலாசாரத்தையும் தலைகீழாக மாற்றும் ஒரு சவாலான முடிவை எடுத்தனர். இது படுகுழிக்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும்.
ஒரு மக்கள்நேய அரசாங்கமாக, மக்களின் தேவைகளை மிகச் சரியாக அடையாளம் காணவும், சீர்குலைந்த பாதையில் பயணித்துக்கொண்டிருந்த பொருளாதார, அரசியல், சமூக, கலாசார மற்றும் சட்ட கட்டமைப்பை சரியான பாதைக்கு மீட்டெடுப்பதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்.
பல ஆண்டுகளாக இந்த நாட்டைப் பாதித்து வரும் ஊழலையும் அநீதியையும் ஒரே இரவில் மாற்ற முடியாது என்றாலும், அரசாங்கம் படிப்படியாக எல்லாவற்றையும் நெறிப்படுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்து வருகிறது.
அரச, தனியார், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார சக்திகளையும் வலுப்படுத்த அரசாங்கம் ஒரு முறையான வேலைத்திட்டத்தைத் தயாரித்துள்ளதுடன், நாட்டை தன்னிறைவு பெறச் செய்வதில் முன்னணியில் இருக்கும் விவசாய சமூகத்தை வலுப்படுத்தவும் தயாராக உள்ளது.
மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், மிகவும் ஸ்திரமான மற்றும் நம்பகமான எதிர்காலத்தை அடைவதற்கு நாம் ஒன்றிணைந்து நம்மை அர்ப்பணிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தை நாம் கடந்து செல்கிறோம்.
நாம் வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியுடன் ஒன்றிணைந்து உழைப்போம்.