"கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேசிய அளவிலான திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நாட்டில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வீதிப் பயன்பாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் காலத்தின் தேவை என்பதை இனங்கண்டு, கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தேசியத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.
நாட்டில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் சமூகத்தை மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன், கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் செயல்படுத்தப்படுவதுடன் அங்கு, ஒழுக்கமான சமூகத்தையும் பிரஜைகளையும் கட்டியெழுப்புவதில் முதன்மை கவனம் செலுத்தப்படுகிறது.
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் சமூக மற்றும் நெறிமுறைகள் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் (அவசர சேவைகள்) வைத்தியர் இந்திக ஜாகொட, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவகுமார் மற்றும் பேராசிரியர் எச்.ஆர். பசிந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (மோட்டார் வாகனங்கள்) மற்றும் குறித்த அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-04-30