கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் தனியார் துறையுடன் இணைந்து ஆயிரம் ஏக்கரில் வள வளர்ப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அரச - தனியார் - மக்கள் கூட்டிணைவுடன் (Public- Private – People Partnership) 4P எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்த முன்மொழியப்பட்ட பாரிய அளவிலான திட்டமாக இந்த வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் இன்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
திட்டம் தொடர்பான குறித்த தொழில்நுட்ப விடயங்களைத் தீர்க்கவும், காணியை விடுவிப்பதற்குத் தேவையான அடிப்படை விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
சூழலைப் பாதுகாப்பதற்காக பொதுமக்களினதும், அரச மற்றும் தனியார் துறையின் பொறுப்பை நினைவுகூரும் வகையில், நமது நாட்டின் பல்லுயிர் பெருக்கம்,வனப்பகுதி, இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்காக பல்வேறு பயன்மிக்கத் திட்டங்கள் தனியார் துறையினதும் பங்களிப்புடன் அடுத்த வருடம் செயல்படுத்த “கிளீன் ஸ்ரீ லங்கா” வேலைத்திட்டம் திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, “கிளீன் ஸ்ரீ லங்கா” வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் எஸ்.பீ.சீ. சுகீஸ்வர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினதும் மற்றும் சுற்றாடல் அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-04-30
-------