இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு
  • :

பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2025.01.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நானாயக்கார தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் நட்புறவுச்சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, கடந்த 7 தசாப்தங்களாக இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய உறவுகள் வலுவடைந்துள்ளன என்றும் இந்த நட்புறவுச் சங்க மீள் ஸ்தாபிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்புக்கு ஒரு சான்றாகும் எனத் தெரிவித்தார். குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இரண்டு  பாராளுமன்றங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் இது ஒரு தளத்தை ஏற்படுத்துகிறது எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது ஐக்கிய இராஜ்ஜியம் வழங்கிய ஆதரவு மற்றும் பரிஸ் கழக உறுப்பினராக கடன் மறுசீரமைப்புக்கு அளித்த பங்களிப்புகளை சபாநாயகர் பாராட்டினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களை  செயலமர்வுகள், மாநாடுகள் மற்றும் ஆய்வுச் பயணங்கள் மூலம் மேம்படுத்துவதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைச் செய்ததற்காக ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்துக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக், சுமார் 50,000 இலங்கை மாணவர்கள் தற்போது ஐக்கிய இராஜ்ஜியத்தில் கல்வி பயின்று வருவதாகத் தெரிவித்ததுடன், கல்வித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி நம்பிக்கை வெளியிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வளர்ப்பதை ஐக்கிய இராஜ்ஜியம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த 30 ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளின்படி, இந்தப் பிராந்தியம் அதிகளவான செல்வாக்கு மிக்கதாக மாறும் என்றும், பிரகாசமான எதிர்காலத்திற்கு இலங்கை ஒரு நல்ல நிலையில் இருப்பதாக அவர் நம்புவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்தமை தொடர்பில் கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நானாயக்கார இதன்போது நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவை மேம்படுத்துவதில் நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். "இலங்கைக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராய்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் இந்தச் சங்கத்தை ஒரு சக்திவாய்ந்த தளமாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்," என அவர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், பாராளுமன்ற ஒத்துழைப்பை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதிலும் மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]