🔸 பெண்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த வெற்றியை, இந்த மகளிர் தினத்தில் பெருமையுடன் கொண்டாட வேண்டும்...
🔸 இந்த முறை அரசியல் குடும்ப பின்னணிக்கு அப்பால் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளின் அடிப்படையில் அதிகமான பெண்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும் - பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்
🔸 இந்த ஆண்டு மகளிர் தினத்துடன் இணைந்து மகளிர் வாரம்...
🔸 இந்நாட்டில் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, கட்சி பேதமின்றி, ஒற்றுமையாக நாங்கள் ஆதரவளிக்கின்றோம் - பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே
பாராளுமன்ற வரலாற்றில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு முழு இலங்கை சமூகமும் அடைந்த வெற்றியைத் தலைகீழாக மாற்ற எந்தப் பிற்போக்கு சக்தியும் அனுமதிக்கப்படக்கூடாது என கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
மார்ச் 8 ஆம் திகதி இடம்பெறும் மகளிர் தினத்தையொட்டி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பாராளுமன்ற வளாகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 13 ஆக இருந்ததாகவும், இந்த முறை அந்த எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது முழு இலங்கை சமூகத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும் பிரதமர் கூறினார். இந்த வெற்றி தானாக நிகழ்ந்ததல்ல என்றும் இந்த நாட்டில் பெண்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் விளைவாக நடந்தது என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், பெண்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் ஈடுபட முடியாது என்ற பரவலான கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், இதுபோன்ற வெற்றியிலும் கூட, கலாச்சாரப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பெண்களைத் தாக்கி, இதை ஒரு கலாச்சாரப் போராக மாற்ற முயற்சிக்கும் குழுக்கள் இருப்பதாகக் கூறினார். அதற்கு எந்த சூழ்நிலையிலும் இடமளிக்க முடியாது என்றும், பெற்றுள்ள வெற்றியை பாதுகாப்பதற்கும் மேலும் மேம்படுத்துவதற்கும் உறுதிபூண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட, பெண்களின் தலைமைத்துவத்திற்கான தடைகளை முறையாக நீக்குவதன் மூலம், அனைவரும் நியாயமாகவும், சமமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் வலியுறுத்தினார். இந்த விடயத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஆற்றும் விசேட பங்களிப்பு தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் குறிப்பிடுகையில், இந்த வருடம் மகளிர் தினத்துடன் இணைந்து மகளிர் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய பல திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அரசியலில் இதுவரை முன்னணிக்கு வராத ஒரு பெரிய குழுவினரின் குரல்கள் இந்த முறை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாகவும், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இதை ஒரு உந்து சக்தியாகப் பயன்படுத்துவதே நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசியல் குடும்ப பின்னணியை விட, அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளின் அடிப்படையில் அதிகமான பெண்கள் இம்முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு தனித்துவமான நிலைமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக பத்தாவது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே குறிப்பிடுகையில், எதிர்க்கட்சி உறுப்பினராக, பத்தாவது பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10% ஐ அடைந்திருப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். உள்ளூராட்சி நிறுவனங்களில் இந்தத் தொகை 25% எனவும், பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்நாட்டின் பாராளுமன்றத்தில் இந்தப் பிரதிநிதித்துவம் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அண்ணளவாக 30% என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டில் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, எந்தவொரு கட்சி பேதமும் இன்றி இணைந்து செயற்படுவதாகவும் சமிந்திரானி கிரிஎல்லே வலியுறுத்தினார்.
அத்துடன், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குறிப்பிடுகையில், மிகவும் செயற்பாட்டுடன் கூடிய ஒன்றியமாக, அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தைப் பாதுகாத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுக்காக பத்தாவது பாராளுமன்றத்திலும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.