ஐரோப்பிய வெளிப்புற நடவடிக்கை சேவையின் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுவர் மரியா கஸ்டிலோ பெர்னாண்டஸ், இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்தார்.
2025 நவம்பர் மாதம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற 4வது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ பசிபிக் அமைச்சரவை மன்றத்தில் பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர மேற்கொண்ட கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, இச்சந்திப்பு விரிவானதும் பயனுள்ளதுமான முறையில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, உலகளாவிய இணைப்பு, வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அவசியமான கடல் தொடர்பு வழித்தடங்களை உறுதிப்படுத்துவதில், இந்தியப் பெருங்கடலிலும் பரந்த இந்தோ பசிபிக் பிராந்தியத்திலும் இலங்கைக்கு உள்ள மூலோபாய முக்கியத்துவத்தை விசேட தூதுவர் வலியுறுத்தினார்.
கடல்சார் பாதுகாப்பையும் கடல் வழிச்செலுத்தலின் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில், கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தமான UNCLOS இன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். அதேவேளை, CRIMARIO மற்றும் IORIS போன்ற பிராந்திய முயற்சிகளில் இலங்கையின் ஈடுபாடும் நினைவுகூரப்பட்டது.
முக்கியமான கடல்சார் உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகளாவிய இணைப்பு தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் அது எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் உணவுப் பாதுகாப்பு மீது ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்ட தற்போதைய உலகளாவிய சவால்களும் கலந்துரையாடப்பட்டன.
இலங்கையில், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை எரிசக்தி மற்றும் இணைப்பு சார்ந்த திட்டங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக விசேட தூதுவர் குறிப்பிட்டார். முன்னெப்போதும் இல்லாத உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள, உறவுகளைப் பல்வகைப்படுத்துவதும், தாங்குதிறனை உருவாக்குவதும் முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
புதிய ஒழுங்குமுறைகளின் கீழ் GSP+ சலுகைக்காக இலங்கை மீண்டும் விண்ணப்பிக்கவுள்ள நிலையில், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தைத் திருத்தும் செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர விசேட தூதுவருக்கு விளக்கமளித்தார். சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகளுக்கான இலங்கையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மே 9ஆம் திகதி கொண்டாடப்படும் ஐரோப்பா தினத்தை முன்னிட்டு, பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர, விசேட தூதுவருக்கும் அவரது குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் அதிமேதகு கார்மென் மொரெனோ, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


