ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக்க தெரிவு

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக்க தெரிவு
  • :

🔸 குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்திற்கு அனுமதி

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக்க தெரிவுசெய்யப்பட்டார். ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (21) முதல் தடவையாகக் கூடியபோதே தலைவர் தெரிவு இடம்பெற்றது. இங்கு (வைத்தியர்) நஜீத் இந்திக்கவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து குழுவில், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் கவனத்தில் எடுக்கப்பட்டது. இது பற்றிக் கலந்துரையாடலில் பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த சட்டமூலம் தொடர்பில் விளக்கமளித்த அதிகாரிகள், நீண்ட நாள் தேவையை நிறைவேற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டனர். குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட வரும்படிகள் மற்றும் சொத்துக்களை மீளவும் அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் இதன் மூலம் கிடைக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறு அபகரிக்கப்படும் சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கு அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இதில் காணப்படுவதாகவும், குற்றச்செயல்கள் மூலம் அரசாங்க சொத்துக்கள் அல்லது தனியார் சொத்துக்கள் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டிருந்தால் அவற்றை முடக்கி, விசாரணைகளை நடத்தி அதற்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதற்கு இச்சட்டமூலத்தின் மூலம் வழி கிடைப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர். இது தனிநபர்களை இலக்குவைக்கும் சட்டமூலம் அல்ல என்றும், குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை இலக்குவைக்கும் சட்டமூலம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் குறித்தும் உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் வினவினர். உள்நாட்டு நிபுணர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் பலருடன் ஒன்லைன் மூலம் நடத்தப்பட்ட நீண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையிலும், ஏனைய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள இதுபோன்ற சட்டத்தை மாதிரியாகக் கொண்டும் இது தயாரிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று அதிகாரிகள் பதிலளித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையாக இருந்தாலும் குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் என்ற ரீதியில் மிகவும் சாதகமாக நோக்குவதாகவும், அரசாங்கம் சமர்ப்பித்துள்ள கொள்கைத் திட்டத்திற்கு இணங்கும் வகையில் இருக்கும் இச்சட்டமூலத்தை வரவேற்பதாகவும் குழுவின் தலைவர் குறிப்பிட்டார். இவ்வாறான சட்டமூலத்தைக் கொண்டுவருதற்கு இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார். நாட்டுக்கு மிகவும் அவசியமான சட்டமூலம் என்பதால் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி வழங்கப்படுவதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், சந்தன சூரியஆரச்சி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, தர்மபிரிய விஜேசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி. சூரியபண்டார, செல்லத்தம்பி திலகநாதன், எம்.கே.எம். அஸ்லம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]