தேசிய உப்புக் கம்பெனியின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பளத்தின் தேசிய உப்புத் தொழிற்சாலை இன்று (29) முதல் மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது
"ரஜ லுணு" எனும் பெயரில் சமையல் உப்பு வர்த்தக பேருடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அந்த தொழிற்சாலை ஊடாக மிகவும் சாதாரண விலையில் சமையல் உப்பு சந்தைக்கு வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்பார்க்கப்பட்டுள்ளது.
இதன் போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு ஆனையிறவில் நடைபெற்றது. தொழிற்சாலையை விருந்தினர்கள் இணைந்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால உரையாற்றுகையில் தற்போது பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள் மூலம் மணித்தியாலத்துக்கு 5 மெட்ரிக் தொன் மேசை உப்பை உற்பத்தி செய்யமுடியும் எனவும் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டிலிருந்து உப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடற்றொழில் அமைச்சர் தனது உரையில், ‘இன்றைய நாள் உங்களுகளும், எங்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியான நாள். பல இன்னல்களைச் சந்தித்தாலும் எமது மண்ணின் வாசத்தை பரப்பியது ஆனையிறவு உப்புத்தான். பலரும் விரும்பிப் பயன்படுத்து ஆனையிறவு மேசை உப்பு மீண்டும் உங்கள் கைகளுக்கு வரப்போகின்றது. ஆனையிறவு உப்புக்கு தனியான ‘மவுசு’ உண்டு. விரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயரில் உலகம் எங்கு இது விற்பனையாகும்’ என்று குறிப்பிட்டார்.