சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறோம். இது நாம் ஒன்றுபடுவதற்கான தருணம் – அது வெறுமனே நாம் அடைந்துள்ள முன்னேற்றங்களை கொண்டாடுவதற்கானது மட்டுமானதல்ல. ஆனால் அது இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்புசார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலமாகும்.
பாலின அடிப்படையிலான வன்முறை, பொருளாதார கஷ்டங்கள் மற்றும் அரசியல் ஒதுக்கல்கள் ஆகியன பெண்களை பொருத்தமற்ற வகையில் பாதிக்கின்றன. குறிப்பாக கிராமிய சமூகங்கள், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தோட்டப்பகுதிகள் மற்றும் முறைசாரா தொழிற்றுறையைச் சேர்ந்தவர்கள் இவற்றுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக இருக்கும்வரை எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒருவரையொருவர் பாதுகாப்பதற்கும், எவரும் கைவிடப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு பெண்ணினதும் உரிமைகளும், பாதுகாப்பும் நிலைநிறுத்தப்படுவதற்கும், நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
எமது சனத்தொகையில் பெண்கள் 52% உள்ளனர். மேலும் 1931 ஆம் ஆண்டு நாம் உலகளாவிய வாக்குரிமையைப் பெற்றோம். கடந்த தேர்தலில் பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க எமக்கு முடிந்தது. அந்த அடைவை நாம் கொண்டாடும் அதே வேளையில், அது இன்னும் மிகக் குறைவு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது பிரஜைகளில் கணிசமான பகுதியினர் தலைமைத்துவம் மற்றும் முடிவெடுக்கும் செயற்பாட்டில் உள்வாங்கப்படாதிருக்கும்போது எமது ஜனநாயகம் முழுமையடையாது. இலங்கை பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றம், டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் ஜனநாயக சவால்களை எதிர்கொண்டு வரும் ஒரு காலகட்டத்தில், எமது சனத்தொகையில் அரைவாசிப் பகுதியினரை நாம் தள்ளிவைக்க முடியாது. இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கும் அனைவருக்கும் ஒரு தாங்குதிறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பெண்களின் குரல்கள், தலைமைத்துவம் மற்றும் முகவராண்மை அவசியமாகும்.
பெண்ணிய இயக்கங்கள் நீண்ட காலமாக மாற்றம் சாத்தியம் என்பதை நமக்குக் கண்முன்னே காட்டியுள்ளன. ஆனால் நாம் தற்போதைய நிலையை சவாலுக்குட்படுத்தி முறையான மாற்றத்தைக் கோரும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இலங்கையின் பிரதமர் என்ற வகையில், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் முகவராண்மையை மையமாகக் கொண்ட கொள்கைகளை முன்னெடுப்பதற்கான எனது உறுதியான அர்ப்பணிப்பை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். இந்த சர்வதேச பெண்கள் தினத்தில், வெறுமனே வார்த்தைகளில் மட்டுமன்றி, பாலின உணர்வுள்ள கொள்கைகள், வரவுசெலவுத்திட்டங்கள் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் விளிம்புநலை சமூகங்களின் வாழ்வு அனுபவங்கள் மூலம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உறுதிபூணுவோம்.
பெண்களின் வாழ்வு செழிப்புறும்போது, சமூகங்கள் செழிப்புற்று விழங்கும். பெண்கள் தலைமையேற்கும்போது, தேசங்களில் சிறந்த மாற்றத்தினை எதிர்பார்க்க முடியும். இந்த சர்வதேச மகளிர் தினத்தில், நாம் சொற்களுக்குள் கட்டுண்டிருக்காது, ஒன்றுபட்டு முன்னேறுவோம். நமக்கு முன்னுள்ள தலைமுறைக்காகவும், இன்று போராடுகின்றவர்களுக்காகவும், எதிர்கால தலைமுறைக்காகவும் உண்மையான, நீடித்த மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு