சிறந்த பொதுப் போக்குவரத்து சேவைக்காக கொத்தணி பஸ் நிறுவன முறைமை ஆரம்பிக்கப்படும் – கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு

சிறந்த பொதுப் போக்குவரத்து சேவைக்காக கொத்தணி பஸ் நிறுவன முறைமை ஆரம்பிக்கப்படும் – கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு
  • :
சிறந்த பொதுப் போக்குவரத்து சேவைக்காக கொத்தணி பஸ் நிறுவன முறைமை ஆரம்பிக்கப்படும் – கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு

 சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் கொத்தணி பஸ் நிறுவன முறைமையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அனுமதி அண்மையில் கிடைத்துள்ளதாகவும் கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (07) கௌரவ அமைச்சர தலைமையில் கூடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதற்கு அமைய, 177, 170 மற்றும் 190 ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பஸ்களை அடிப்படையாகக் கொண்டு, முன்னோடி திட்டமாக இந்த கொத்தணி பஸ் நிறுவன முறைமை ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முன்னர் நடைமுறையில் இருந்த சாதாரண சேவை, அரை சொகுசு சேவை, சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய நான்கு வகைப்பாடுகளில், அரை சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய இரண்டு வகைப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அதற்கான விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
மேலும், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பஸ் சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு விலைச் சூத்திரத்தை பயன்படுத்துவது நியாயமானதல்ல எனத் தெரிவித்த அமைச்சர், நீண்ட தூர சேவைகளில் ஏற்படும் அதிக செலவுகளை கருத்தில் கொண்டு, அதற்கான பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு தனியான முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பஸ் தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும், பயணிகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
 
எரிபொருள் விலை குறைக்கப்படும் சந்தர்ப்பங்களில் பஸ் கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் குழுத் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். இதன்போது, எரிபொருள் விலை குறைவடைந்தாலும், ஏனைய செலவுகள் தொடர்ந்தும் உயர்ந்த நிலையில் காணப்படுவது சவாலாக உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வீதி விபத்துக்களை குறைத்தல், சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான தனியான பாதைகளை அமைத்தல், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள், பஸ் வண்டிகளில் பயணிகளுக்கு மீதிப் பணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இது விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
 
அத்துடன், போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளுக்கு தொடர்புடையதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு தலையீடு செய்யுமாறும் குழுத் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
 
மேலும், (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் வெளியிடப்பட்டு, 2026 மார்ச் 19 ஆம் திகதியிடப்பட்ட 2480/22 இலக்க அதிவிசேட வர்த்தமான அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குழுவில் ஆராயப்பட்டு, பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உற்பத்தியாளர்களால் பாதுகாப்புப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களுக்கு பாதுகாப்புப் பட்டிகளை பொருத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த சலுகைக் காலத்தை 2026.03.20 முதல் ஆரம்பித்து 2026.06.19 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக குறித்த ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது.
 
கௌரவ நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Articles