சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானமொன்றுக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரு விதிமுறைகளுக்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானமொன்றுக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரு விதிமுறைகளுக்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி
  • :
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானமொன்றுக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரு விதிமுறைகளுக்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதுடன், அவற்றைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
 
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதிபற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கு அமைய, (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையில் வெளியிடப்பட்ட தீர்மானம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளைகளும் இங்கு ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 0%, 15% மற்றும் 20% ஆகிய சுங்க இறக்குமதி வரி விகிதங்கள், 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 0%, 10%, 20% மற்றும் 30% என நான்கு அடுக்குகளைக் கொண்ட புதிய கட்டமைப்பின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளன.
 
இந்தத் திருத்தங்கள் வெறுமனே வரி விகிதங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மட்டுமல்லாது, அடுத்த பத்தாண்டுகளுக்கான நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை வடிவமைக்கும் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகும் எனக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
விஞ்ஞான அடிப்படையிலும் முன்னறிவிக்கக்கூடியதுமான வரிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம், இலங்கையை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் மேலும் திறனுள்ளதாக இணைப்பதே இக்கொள்கையின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இந்தக் கொள்கையின் கீழ், ஐக்கிய நாடுகளின் பரந்துபட்ட பொருளாதார வகைப்பாடுத்தல்களை அடிப்படையாகக் கொண்ட புதிய நான்கு அடுக்கு வரிக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பல HS குறியீடுகள் மறுசீரமைக்கப்படவுள்ளன.
மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், உணர்திறன் மிக்க இடைநிலைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிய நான்கு பிரதான வகைகளின் கீழ் புதிய வரி கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், உள்நாட்டு தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் அரச வருவாயை நிலைநிறுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
கட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், தரையோடுகளுக்கான தற்போதைய 85–90 சதவீத இறக்குமதி வரி விகிதத்தை 2029 ஆம் ஆண்டளவில் படிப்படியாக 20 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் குறைவதுடன், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு சாதகமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உள்நாட்டு தொழில்துறைகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, பல்வேறு துறைகளுக்கான புதிய தேசிய துணைப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
 
மேலும், 2029 ஆம் ஆண்டளவில் CESS மற்றும் PAL போன்ற வரிகளை படிப்படியாக நீக்கி, எளிமையான சுங்கவரி முறைக்குத் திரும்புவது அரசாங்கத்தின் இலக்காகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வரி தளர்வுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த வரி மறுசீரமைப்புகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 18 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 36 பில்லியன் அமெரிக்க டொலராக இரட்டிப்பாக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இலக்கை அடைவதற்கு ஆதரவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
குறிப்பாக மின்னணு உபகரணங்கள், ரப்பர் உற்பத்திப் பொருட்கள், மருந்துத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் ஆகியவற்றை உலகளாவிய வழங்கல் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதற்கு இந்தக் கொள்கை முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
 
இதனுடன், வர்த்தகத் தரவுகளைப் புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் குழு தீவிர கவனம் செலுத்தியது. வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்திடம் உள்ள வர்த்தகத் தரவுகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்பது குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பதற்குத் தேவையான அனைத்து வர்த்தகத் தரவுகளையும் தொடர்புடைய தகவல்களையும் ஒரு வார காலத்திற்குள் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles