உள்நாட்டு மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஆண்டுதோறும் பெருந் தொகை வெளிநாடுகளுக்குச் செல்கிறது. இந்த பணத்தை உள்நாட்டில் சேமிப்பதற்கும், தரமான மருந்துகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டில் பூர்த்தி செய்வதற்கும், மூலிகை பயிர்ச்செய்கை மூலம் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் "தேசிய மூலிகை பயிர்ச்செய்கைத் திட்டம் மற்றும் மூலிகை சேகரிப்புத் திட்டம்" செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மூலிகைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2025 மார்ச் 26 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் உள்ள நிக்கவரட்டிய "ரந்தெனிகம" மூலிகைத் தோட்டத்தில் நடைபெற உள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் கருத்தின்படி செயல்படுத்தப்படும் இந்த தேசிய திட்டத்தின் கீழ், இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ், கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நாடு முழுவதும் உள்ள 3 மூலிகைத் தோட்டங்கள் வணிக ரீதியான மூலிகைத் தோட்டங்களாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள உள்நாட்டு மருத்துவப் பிரிவு, ஆயுர்வேதத் திணைக்களம், நாட்டின் அனைத்து மாகாண ஆயுர்வேதத் திணைக்களங்கள், மூலிகைத் தோட்டங்கள், ஆயுர்வேத, சித்த, யுனானி அனைத்து வைத்தியசாலைகள், அனுராதபுர சமூக சுகாதார மேம்பாட்டுச் சேவை மற்றும் நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள உள்நாட்டு மருத்துவ அபிவிருத்தி அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், பாரம்பரிய மருத்துவர்கள், ஆயுர்வேத பாதுகாப்புச் சபைகள், கிராமப்புற சமூக அடிப்படையிலான அமைப்புகள், மூலிகை விவசாயிகள் மற்றும் இலங்கை ஆயுர்வேத மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து ஒரு விரிவான வேலைத்திட்டமாக இந்தத் தேசிய மூலிகை பயிர்ச்செய்கைத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.