இலங்கை - கியூபா இருதரப்பு சுகாதார சேவையை ஒன்றிணைந்து வலுப்படுத்துவது தொடர்பாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இலங்கைக்கான கியூபா தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுகாதாரத் துறை உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களுக்கும், இலங்கைக்கான கியூபா குடியரசின் தூதர் பத்ரிசியா லாசரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) அவர்களுக்கும் இடையே சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் மற்றும் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தக் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்ட்டது.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பையும் நெருங்கிய உறவுகளையும் நினைவு கூர்ந்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகளை மேம்படுத்துவதன் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தினார். மேலும், நாட்டின் சுகாதாரத் துறையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் வெற்றிகரமான நடவடிக்கைகளையும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள திட்டமிடப்பட்ட செயல்திட்டங்களைபற்றி விளக்கமளித்தார்.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையே சுகாதாரத் துறையில் நீண்டகால மற்றும் மிகவும் வலுவான இருதரப்பு உறவு உள்ளது என்றும், கியூபாவின் மேம்பட்ட பொது சுகாதார அமைப்பு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப (Biotechnology) அறிவு ஆகியவை இலங்கையின் சுகாதாரத் துறையை பல்வேறு சமயங்களில் மேம்படுத்த உதவியுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது உரையாற்றிய தூதர் திருமதி. பட்ரிசியா லசாரா குவேரா, கியூபாவின் உதவியுடன் நாட்டில் செயல்படுத்தப்பட்ட நுளம்பு ஒழிப்புத் திட்டங்கள், டெங்குவை ஒழிப்பதற்கான கியூபாவின் நிபுணத்துவத்தை வழங்குதல், அத்துடன் மருத்துவம் மற்றும் தடுப்பூசி உற்பத்தித் துறைகளில் புதிய அணுகுமுறைகள், கியூபாவில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வழங்குதல் மற்றும் கல்வி உதவித்தொகைகள் ஆகியவை குறித்துப் பேசினார்.
கோவிட்-19 காலகட்டத்தில் கியூபாவால் தயாரிக்கப்பட்ட 'அப்தாலா' போன்ற தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் நாட்டைப் பாதித்த சுனாமிப் பேரழிவு உட்பட பேரிடர்கள் மற்றும் அவசர காலங்களில் வழங்கப்படும் உதவிகள் குறித்தும் தூதர் சுகாதார அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
இதன்போது இலங்கைக்கான கியூபா குடியரசின் தூதர் பட்ரிசியா லாசரா பெகோ குவேரா, சுகாதாரம், விளையாட்டு, விவசாயம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.


