இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்
  • :
இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனர் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் (Nayyar Naseer), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் சுனைரா லதீஃப் (Zunaira Latif) மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

 கலாசார பாரம்பரியம் மற்றும் நட்பு நிறைந்த இலங்கை போன்றதொரு நாட்டில் உயர்ஸ்தானிகராகப் பணியாற்ற முதல் தடவையாகக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சியடைவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவிவரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் பயனுள்ள நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் தாம் உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கை சந்தித்த ஒவ்வொரு நெருக்கடியான காலகட்டத்திலும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் வழங்கி வந்த தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு நன்றியைத் தெரிவித்தார். யுத்த சூழல் முதல் தித்வா சூறாவளித் தாக்கம் வரையில் நாடு எதிர்கொண்ட பல்வேறு சவால்களின்போது, பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை உண்மையான நட்பின் வெளிப்பாடாகும் என்பதையும் சபாநாயகர் நினைவுகூர்ந்தார்.
 
தற்போதைய சர்வதேச சூழலில் உலக நல்லிணக்கத்தை உருவாக்குவதில், பாகிஸ்தான் ஒரு செயல்திறன் மிக்க மத்தியஸ்தராக ஆற்றிவரும் முக்கிய வகிபாகத்தை கௌரவ சபாநாயகர் இங்கு பாராட்டினார். மேலும், இலங்கை-பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் நிறுவப்பட்டது, இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது அவர் வலியுறுத்தினார்.
 
மேலும், பண்டைய காந்தாரத்தைச் சேர்ந்த கலைப்படைப்பான பாகிஸ்தானின் லாகூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலையை (Fasting Buddha Statue) இலங்கையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கௌரவ சபாநாயகர் அவர்கள் இங்கு முன்வைத்தார். இதன் மூலம் குறித்த சிலையை இலங்கை பக்தர்கள் தரிசிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
 
அழகான இயற்கைச் சூழலையும், விருந்தோம்பல் குணம் கொண்ட மக்களையும் கொண்டுள்ள இலங்கை, சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் துறையில் தனது அனுபவத்தையும் அறிவையும் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
 
இதேவேளை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உதவித்தொகை பரிமாற்றத் திட்டங்களை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அனுபவங்களையும் அறிவையும் பரிமாறிக்கொள்ளும் திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
 
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், சபை முதல்வர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
 
“தித்வா" சூறாவளித் தாக்கத்தின் பின்னர் இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய போக்குவரத்து அமைச்சர்களின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற தமது அனுபவத்தை நினைவு கூர்ந்த அமைச்சர், நாட்டில் முன்மொழியப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.
 
இந்தச் சந்திப்பில் இரு நாடுகளிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடைமுறை நடவடிக்கைகள், அத்துடன் பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான அனுபவப் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

Related Articles