இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு எனும் கருப்பொருளிலான செயற்றிட்டம் நாளையிலிருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான ஐனாதிபதி செயலக ஏற்பாட்டுக் குழுவினர் புகையிரதம் மூலம் நேற்றைய தினம் (12.08.2025) புதன்கிழமை மதியம் 02.30. மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
புகையிரதம் மூலம் வருகைதந்த சனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ர உதவிச் செயலாளர் மனோகரன் சாரதா ஞ்சலி கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான திரு. தசூன் உதார மற்றும் திரு. துலீப் சேமரத்தன உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினர்களுக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்வில் கடற்தொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகையிரதத்தில் வந்தோரை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து புகையிரதத்தில் வந்த குழுவினரால் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கான இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளையும் அன்பளிப்பு செய்யப்பட்டது.


