இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டன
அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “தடையற்ற சூழல் – அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்” ஒன்றை உருவாக்குவதற்காக, இயலாமையுடைய நபர்களை உள்ளடக்கிய சேவை மற்றும் வசதிகளுக்கான 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளைப் பெறும் நிகழ்வு, இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்பட்டது. குறித்த ஒன்றியம் கடந்த 25 மற்றும் 27ஆம் திகதிகளில் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.
இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமானது இயலாமையுடைய நபர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பல்முனை அணுகுமுறையுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம், இயலாமையுடைய சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் முழுமையான மற்றும் பயனுள்ள சமூகப் பங்கேற்பு மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அமைய தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைத் தொடர்வதற்கும், புதிய முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதற்கும் இயலாமையுடைய நபர்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு சார்பாகச் செயற்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இயலாமையுடைய நபர்கள் தொடர்பில் பணியாற்றும் துறைசார் வல்லுனர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தமது சார்பிலான முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
இதில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.


