காலநிலை மாற்றத்தின் மத்தியில் யானைகள் மற்றும் சிறுத்தைகளைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மோசமான காலநிலை மாற்றத்தினால் யானைகள் மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுப்பது தொடர்பில் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இதுபற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக எல்-நினோ மற்றும் லா–நினோ காலநிலையினால் யானைகள் மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இது பற்றி விளக்கமளித்தனர்.
காலநிலை மாற்றத்தினால் வனஜீவராசிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் முதற் கட்டமாக யானை மற்றும் சிறுத்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்துக் கவனம் செலுத்துவதுடன், எதிர்காலத்தில் இவ்விடயத்தை விரிவாக ஆராய்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பரிந்துரைகளை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
காலநிலை தொடர்பான நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இக்கலந்துரையாடலில் இணைந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். யானை மனிதன் மோதல்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, ரியாஸ் பாரூக், சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.


