இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் 22.03.2025 பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிட்ட அறிவித்தல் தொடர்பானது.
மேற்கு, சப்ரகமுவ, மத்தி, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை மற்றும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமான கடும் காற்றும் வீசக் கூடும்.
மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வறிவித்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளது அதன்படி மின்னல் மற்றும் இடியுடன் கூடிய காலநிலையின் போது பாதுகாப்பான நடவடிக்கைகளாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
அதற்கிணங்க, திறந்த வெளியில் அல்லது மரங்களுக்கு கீழ் தங்கியிருக்காது, பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது பாதுகாப்பான வாகனங்களில் தங்கியிருத்தல்.
வயல் வெளி, தேயிலைத் தோட்டம், விளையாட்டு மைதானம் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த இடங்களில் தங்கியிருப்பதை தவிர்த்தல்.
திறந்த வெளியில் தொலைபேசி மற்றும் மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல், சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகு போன்றவற்றின் பாவனைகளை முடிந்தவரை தவிர்த்தல், கடும் காற்றினால் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் முறிந்து விடுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன அது தொடர்பாக கவனத்தில் கொள்ளுதல், மற்றும் அவசர நிலைமைகளில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரியின் உதவியைப் பெறுதல் போன்ற செயற்பாடுகளை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளாக வழங்கியுள்ளது