கொம்பனித்தெரு மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடிந்த வரை விரைவாகப் பூரணப்படுத்துக
இரண்டு வருட தாமதத்தினால் 400 மில்லியன் ரூபாய் நட்டம்
கொம்பனித்தெருவில் பொலிஸ் நிலையத்தை அடுத்துள்ள மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதனால், ஒப்பந்ததாரர்களுக்கு சுமார் 400 மில்லியன் ரூபாய் தாமதக் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது தொடர்பான விசேட கண்கானிப்பு விஜயத்தின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர், மேலும் இந்த தாமதத்திற்கு காரணமான பொலிஸ் விடுதிகளை அகற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் பாலத்தின் கட்டுமானப் பணிகளை எப்படியாவது நிறைவேற்றுமாறும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.