சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது. அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்கு பல வெற்றிகளை அடைய தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம் என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பல தசாப்தங்களாக கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பங்கேற்பு மற்றும் வகிபாகத்தை அதிகரித்து, கடந்த பொதுத் தேர்தலில் இருபத்தி இரண்டு பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல், ஆண்- பெண் சமூக சமத்துவத்திற்கான சமூக நீதியை அடைவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையான உற்பத்திப் பொருளாதார செயல்பாட்டில், இந்நாட்டின் சனத்தொகையில் 51.7% ஆக இருக்கும் பெண்களை தீவிரமாகவும் செயற்திறனுடனும் ஈடுபடுத்தும் திட்டத்தை நாம் செயல்படுத்தியுள்ளோம்.
நீதியான சமூகம், சுதந்திரமான நாடு, சுதந்திரமான பெண்கள் என்ற அபிலாஷைகளை அடையும் வகையில் வீடு, போக்குவரத்து, சமூகம், தொழிலிடம் மற்றும் அரசியல் உட்பட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் போன்ற பெண்களின் தனித்துவமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரச கொள்கைகளை வகுப்பதற்கு நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.
இதற்கமைய, " சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம்,உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ் " நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் " என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதிலுள்ள அர்த்தம் மற்றும் நடைமுறைச்சாத்தியம் என்பனவற்றை நினைவூட்ட வேண்டும்.
பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்த்து சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது மனார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநுர குமார திசாநாயக்க
சனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2025 மார்ச் மாதம் 08 ஆம் திகதி