மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும பெறும் மிக வறிய குடும்பங்களை மேம்படுத்துவதற்கு 90 மில்லியன் நிதி 14 பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட மிக வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 600 குடும்பங்களுக்கு தலா 150,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு தெரிவித்தார்.
மேலும் அஸ்வசும நன்மை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளின் தரத்தை உயர்த்துவதற்கு NVQ Ill மற்றும் NVQ IV தரத்தினை உடைய கற்கைநெறிகளை அரச மற்றும் தனியார் துறையில் மேற்கொள்வதற்கு தனி நபருக்கு ரூபா 50,000 நிதி வழங்குவதுடன் தொழிற் துறையினை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் கொள்வனவிற்கு மேலதிக நிதி ரூபா 50,000 அரசாங்க அதிபரின் அனுமதியுடன் வழங்கப்படுவதுடன், மாவட்டத்தில் சமுர்த்தி சந்தைப்படுத்தல் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை 11 மில்லியனுக்கு அதிகமான நிதியானது வழங்கப்பட்டுள்ளன.
இத் திட்டத்தினூடாக கனரக வாகன இயக்குனர் பயற்சிகளை நிறைவு செய்த இளைஞர்கள் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச தொழிற் சந்தைக்கு எமது இளைஞர் யுவதிகளை இணைப்பதற்கு எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் யப்பான், கொரியன் மற்றும் ஜெர்மன் வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


