மியான்மாரில் நிவாரணப் பணிகளுக்கு சென்ற முப்படைகளின் மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது

மியான்மாரில் நிவாரணப் பணிகளுக்கு சென்ற முப்படைகளின் மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது
  • :

மியான்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஏப்ரல் 26 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலன் ஊடாக (BIA) நாடு திரும்பியது.

பிரிகேடியர் புண்ய கருணாதிலக்க தலைமையில் மியன்மார் சென்று திரும்பிய குழுவினரை இலங்கை இராணுவத் தலைமையகத்தின் ஆராய்ச்சி கருத்து மற்றும் கோட்பாடு பணிமனையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நசீர் மஜீத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இந்த மாத தொடக்கத்தில் மியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தின் பின் இந்த முப்படை நிவாரண குழு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஏப்ரல் 5 ஆம் திகதி மியன்மாருக்கு அனுப்பப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவர்களின் மேற்பார்வையின் கீழ் மற்றும் வெளியுறவு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இந்நடவடிக்கை மேகொள்ளப்பட்டது.

மியன்மாரின் யங்கோன் நகரிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Nay Pyi Taw மாகாணத்தில் குறிப்பாக நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியான Pobba Thiri நகரில் இலங்கையின் நிவாரண குழு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.

அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய இந்தக் குழு, இடம்பெயர்ந்த மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்ய சூழ்நிலை மதிப்பீட்டை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து நடமாடும் மருத்துவமனைகளை நிறுவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்கத் தொடங்கியது. இந்த மருத்துவப் பணிகளின் போது காயங்களுக்கு சிகிச்சை அளித்தல், நோய் பரவலைத் தடுத்தல் மற்றும் வர்த்தக அமைச்சக வளாகம், Lat Lok Toun Pagoda மற்றும் Mashikhana Monastery போன்ற தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேவை, உளவியல் ஆதரவு மற்றும் சுகாதாரக் கல்வி போன்றவை இலங்கை குழுவினரின் மனிதாபிமான சேவைக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தம் நாட்டுக்கு மிகவும் அவசியமான வேளையில் வழங்கப்பட்ட உதவிக்கு மியன்மார் அதிகாரிகள் இலங்கை பாராட்டியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த மற்றும் பரஸ்பர நட்பின் அடையாளமாக இதை கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

இன்று நாடு திரும்பிய இலங்கை குழுவினர் ஒரு நாட்டின் பாராட்டையும் பிராந்தியத்தின் நன்திப்பையும் பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் போது இலங்கையின் வளர்ந்து வரும் பங்கு மற்றும் திறனை எடுத்துக்காட்டுவதாகவும் இந்நடவடிக்கை அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]