அரசாங்கத்தின் பிரதான பால் உற்பத்தி நிறுவனமான மில்கோ கடந்த ஐந்து மாதங்களில் மிக வேகமாக முன்னேற்றமடைந்துள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபய தெரிவித்தார்.
மில்கோ நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே தலைவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போது மில்கோ நிறுவனத்தின் விநியோக வலையமைப்பு பரவலாக்கப்பட்டுள்ளதாகவும், மில்கோ நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ஹைலேண்ட் உற்பத்திகளை மக்களுக்கு அசௌகரியம் இன்றி சந்தையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது நிறுவனத்தின் 50 வீதமான கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
பால் பண்ணையாளர்களுக்காக செலுத்துவதற்கு காணப்பட்ட 500 மில்லியன் ரூபாய் வரையிலான மீதித் தொகை விரைவாக செலுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த பற்று நிதி முழுமையாக செலுத்தப்பட்டு முடிவடைந்துள்ளதாகவும், ஏனைய விநியோகத்தர்களுக்கான 790 மில்லியன் ரூபாய் அளவு பற்று முதலும் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அது மாத்திரமன்றி அங்கு காணப்பட்ட வங்கி மேலதிகப் பற்று மீதி 1800 மில்லியன் ரூபா தற்போது 1200 மில்லியன் ரூபா வரை குறைப்பதற்கு முடிந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது ஹைலேண்ட் உற்பத்தி நாமத்தை (பிராண்ட் ) மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முடிந்துள்ளதாகவும், அண்மையில் இடம்பெற்ற விருது விழாவில் சிறந்த பால் உற்பத்திக்கான விருது ஹைலேண்ட் பாலுக்காக வெற்றி பெறுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் தடைப்பட்டிருந்த விநியோக வலையமைப்பு தற்போது ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் நாடு முழுவதும் பிரதான நகரங்களை உள்ளடக்கியவாறு மில்கோ நிறுவனத்தின் 500 விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தலைவர் விபரித்தார்.
தற்போது அந்த விற்பனை நிலையங்களில் சிலவற்றை ஆரம்பித்துள்ளதுடன், எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் அந்த இலக்கை அடைவதற்கு எதிர்பார்ப்பதாகவும் மில்கோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெளிவுபடுத்தினார்.