பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க
பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் (30) பலாலி விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் பலாலி விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளின் ஊழியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடி, தற்போதுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அனைத்துப் பிரிவுகளையும் மேம்படுத்தவும் அபிவிருத்தி செய்யவும் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“ஏற்கனவே சர்வதேச விமான நிலையமாக உள்ள பலாலி விமான நிலையத்தை பயன்படுத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே அதிக தேவை உள்ளது போல் தெரிகிறது. குறிப்பாக தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கிருந்து உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம். அதற்காக இலங்கையின் விமான பயண சட்டத்தில் திருத்தங்கள் செய்து உள்நாட்டு விமான பயணங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி ஒரு ஊன்றுகோலாக இருக்கும். இந்த விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு விரைவில் மேம்படுத்த வேண்டும். அதற்கு இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று, ஓடுபாதையை நீட்டிக்க வேண்டும். மற்றொன்று, பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய ஒரு பொருத்தமான முனையத்தை அமைக்க வேண்டும். இந்த அபிவிருத்திப் பணிகள் சாத்தியக்கூறு ஆய்வோடு புதிய வணிக திட்டங்களுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்."