மார்ச் 28 அன்று மியன்மாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் மியன்மார் அரசுக்கு பிராந்திய அளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.
இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான நெருங்கிய உறவை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும், அவசரகால மீட்புக் குழுக்களையும் வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளையும், தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களையும் வழங்குவது தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நேற்று (31) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள், ஏனைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான ஒருங்கிணைப்புப் பொறிமுறையை உருவாக்குவது மற்றும் விரைவாக அவசரகால மீட்புக் குழுக்களை மியன்மாருக்கு அனுப்புவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.