தெட்சணகைலாசம் என்னும் திருகோணமலையில் அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி, 18 சக்தி பீடங்களில் முதன்மையானதும் 51 சக்தி பீடங்களில் ஒன்றுமாகிய அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் இன்று (01) காலை 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்பாளின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தொடங்கினார்கள். ஆண்கள் அங்கப்பிரதட்ஷனையும் பெண்கள் அடிஅழித்தல் நிகழ்வும் நடைபெற்றது.
கற்பூரச்சட்டி எடுத்தல், அடிஅழித்தல், அங்கப்பிரதட்ஷணம் செய்யும் விரத அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை கோபுர வாசலில் இருந்து ஆரம்பித்து கோபுர வாசலிலேயே நிறைவு செய்வதை காணக்கூடியதாக அமைந்தது.
மேலும் விசேட பூஜை நடைபெற்று அம்பிகையானவள் வெளி வீதி வலம் வந்து பக்த அடியார்களுக்கு காட்சியளித்தார். பின்பு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு பூஜை இனிதே நிறைவு பெற்றது. அம்பிகை அடியார்களுக்கு மகேஸ்வர பூஜை என்று அழைக்கப்படும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
எதிர்வரும் வியாழக்கிழமை (10) காலை 8.00 மணிக்கு இரதோற்ஸவமும், வெள்ளிக்கிழமை (11) தீர்த்தோற்ஸவமும், அன்று இரவு துவஜ அவரோஹணம் என்னும் கொடியிறக்கமும் இடம்பெறும்.
காராம்பசு வாகனம், மகர வாகனம், சர்ப்ப வாகனம், அன்ன வாகனம்,மஞ்சத்தில் பவனி வருதல், கைலாச வாகனம்,புராதன சிம்ம வாகனம், குதிரை வாகனம், சப்பரத் திருவிழா, இரதோற்சவம், தீர்த்தோற்சவம் என 11 நாட்களைக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உற்சவங்கள் நடைபெறும். இறுதியாக பூங்காவனத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும்.
மகோற்சவ காலங்களில் விசேட நாதஸ்வர தவில் கச்சேரிகளுடன் திருவிழா சிறப்புற நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் அம்பிகையின் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.