பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தின் அம்சங்களை வலுப்படுத்த தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பாராளுமன்றத்தின் பிரதான அதிகாரிகளைச் சந்தித்த பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிப்பு
பரிந்துரைக்கப்பட்ட சட்டவாக்க அளவுகோல்களைப் பூர்த்தி செய்துள்ளதா என்பது தொடர்பான சுய மதிப்பீட்டை பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பாராளுமன்றம் முன்னெடுத்தது
பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் நல்லாட்சித் திட்டத்தின் திட்ட முகாமையாளர் ஃப்ரேசர் மெக்கின்டோஷ், சீஷேல் தேசிய பேரவையின் பிரதிச் செயலாளர் நாயகம் அலக்சான்ரியா ஃபௌரே ஆகியோர் அண்மையில் (24) இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ஜனநாயக சட்டவாங்கங்களின் அளவுகோள்களின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இலங்கை பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுயமதிப்பீட்டு நடவடிக்கைக்கு உதவும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்தபோதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
பரிந்துரைக்கப்பட்ட அளவுத்திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றை பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இக்குழுவினர் சபாநாயகருக்கு விளக்கமளித்தனர்.
பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டிய முறை மற்றும் அவை செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் ஆகக் குறைந்த தரநிலைகள் மற்றும் வழிகாட்டல்கள் இந்தப் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோள்களின் கீழ் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவற்றைப் பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிறந்த ஜனநாயகம் மிக்க சட்டவாக்க செயற்பாடுகளை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர்கள் எடுத்துக் கூறினர். இதற்கு அமைய ஜனநாயக ரீதியான சட்டவாக்க செயற்பாடுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவுத்திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்றன் என்ற ரீதியில் சுய மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தூதுக் குழுவினர் வலியுறுத்தினர்.
வெஸ்மின்ஸ்டர் பாராளுமன்ற மரபுகளின் கீழ் பிரித்தானிய பாராளுமன்றத்தில் காணப்படும் நடைமுறைகள் பற்றி இலங்கைப் பாராளுமன்றம் அதிக அக்கறைகொண்டு செயற்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சாபாநாயகர் குறிப்பிட்டார். அத்துடன், ஜனநாயக சட்டவாக்கம் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களுக்கு அமைய ஏற்கனவு இலங்கைப் பாராளுமன்றம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு அமைய ஏற்கனவே குழுக்கள், இயலாமை உடைய நபர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் உள்ளிட்ட ஒன்றியங்கள் மற்றும் பாராளுமன்ற நட்புறவு சங்கங்கள் என்பன உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த சபாநாயகர், இதன் ஊடாக அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டவாக்கச் செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் அதிகாரிகள் குழு இலங்கைப் பாராளுமன்றத்தில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர ஆகியோரையும் சந்தித்தனர். சிறந்த ஜனநாயகப் பாராளுமன்றக் கலாச்சாரம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதில் கட்சி வேறுபாடின்றி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் சபையின் செயற்பாடுகளில் பங்களிப்புச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் பிரதிச் சாபாநாயகர் சுட்டிக்காட்டினார். பத்தாவது பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கிடைத்திருப்பதானது சாதகமான செய்தியை வெளிப்படுத்தியிருப்பதாக கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.
இந்தக் குழுவினர் கௌரவ சபைமுதல்வர், அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், இலங்கைப் பாராளுமன்றம் ஜனநாயக சட்டவாக்கம் குறித்த அளவுகோளை சரியான முறையில் நிறைவேற்றுகின்றதா என்பதை அவரிடமிருந்து மீள் உறுதிப்படுத்திக் கொண்டனர். இதனை மேலும் மேம்படுத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர். ஜனநாயகப் பாராளுமன்ற கலாசாரத்தை மேம்படுத்துவதில் பாராளுமன்றப் பணியாளர்களின் முக்கிய வகிபாகத்தைச் சுட்டிக்காட்டிய சபைமுதல்வர், இதற்கான செயலமர்வுகள், சர்வதேச பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன்பகிர்வு வாய்ப்புக்களை வழங்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பாராளுமன்றப் பணியாளர்களின் திறனை விருத்தி செய்வதற்காக பாராளுமன்ற அக்கடமியொன்றை அடுத்த வருடம் அமைப்பதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
இக்குழுவினர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரையும் சந்தித்தனர். இதன்போது பாராளுமன்றத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய விடயப்பரப்புக்கள் குறித்து செயலாளர் நாயகம் பொதுவான விளக்கமொன்றை வழங்கினார். பாராளுமன்ற சபையின் நடவடிக்கைகளுக்கு மாத்திரமே தற்பொழுது சைகைமொழி உரைபெயர்ப்புக்கள் வழங்கப்படுவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். கோப், கோபா போன்ற பிரதான குழுக்களின் அமர்வுகளுக்கும் சைகைமொழியிலான உரைபெயர்ப்பை வழங்குவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் அவர் எடுத்துக் கூறினார்.
பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் நல்லாட்சித் திட்டத்தின் திட்ட முகாமையாளர் ஃப்ரேசர் மெக்கின்டோஷ், சீஷேல் தேசிய பேரவையின் பிரதிச் செயலாளர் நாயகம் அலக்சான்ரியா ஃபௌரே ஆகியோர் சட்டம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் தலைவர்கள், பணியாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுயமதிப்பீடு தொடர்பிலான தமது அவதானிப்புக்கள் மற்றும் தமக்குக் கிடைத்த அனுபவங்கள் குறித்த விளக்கத்தை இத்திட்டத்தின் இறுதி நாளான மார்ச் 28ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் முன்வைத்தனர். பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
இது பற்றித் தமது கருத்தைத் தெரிவித்த குழுவினர், இலங்கைப் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுயமதிப்பீடு பற்றிய தமது அறிக்கையை எதிர்காலத்தில் முன்வைப்பதாகக் குறிப்பிட்டனர். ஜனநாயக சட்டவாக்கத்திற்குத் தேவையான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குவதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.