பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்
  • :
🔸 இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு
🔸 பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது
 
🔸 பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல்
 
பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட “போக்குவரத்துத் துறை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை நேர்மறையான திசையில் வழிநடத்துதல்" என்ற உபகுழுவில் ஆராயப்பட்டது.
 
இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் 2025.04.09 அன்று கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
 
இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களையும் அவர்கள் குழுவிடம் முன்வைத்தனர்.
 
பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பஸ்களுக்குத் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 29வது பிரிவின் படி பஸ்கள், லொறிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்தத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனுமதி இன்றி மாகாண சபைகளில் பதிவுசெய்யப்பட்ட கராஜ்களினால் இந்தத் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் கராஜ்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் சிக்கல்கள் இருப்பதால், இவற்றை ஒழுங்குமுறைப் படுத்தவேண்டியதன் அவசியத்தை உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
 
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழான நிர்மாணக் கட்டளைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, புதிய பஸ்களை இறக்குமதி செய்வதிலும், ஏற்கனவே உள்ள பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இருக்கைகளுக்கு இடையில் பொருத்தமான இடைவெளி, தேவையற்ற உபரணங்களை அகற்றுதல் மற்றும் ஆசனப் பட்டிகளை அணிவது போன்ற விடயங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
 
அதன்படி, தொடர்புடைய தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளுடன் கூடிய அறிக்கையைத் தயாரித்து, இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் உபகுழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
 
பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சாரதிகளின் தொழிலை தரப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உபகுழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
 
அத்துடன், கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் குறித்த தரவுகளை உடனடியாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொண்டது. தரவுகளின் அடிப்படையில் எதிர்கால பரிந்துரைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை உப குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
 
பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், சாரதிகளின் உடலில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிதல் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகள் முறையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
 
இந்த உபகுழு, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை முதன்மையாக ஆராய்ந்து, பின்னர் தேவையான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைத் தயாரிக்கும்.
 
இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த. சில்வாவும் பங்கேற்றார்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]