புதிய அரசாங்கத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
•கடன் மறுசீரமைப்பு நிறைவு
•சிறு மற்றும் மத்திய தர தொழில் முனைவோருக்கு பல சலுகைகள்
•குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு பாதுகாப்பு
பொருளாதார நிலைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான உத்தேச நிவாரணப் பொதிகள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்றது.
தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை
பொருளாதார ஸ்திரப்படுத்தல் செயல்முறை மற்றும் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் தொடர்பான ஊடக அறிக்கை
01.பொருளாதார ஸ்திரத்தன்மை
முன்னைய ஆட்சிகள் உருவாக்கிய படுகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது முக்கியமானது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த வேளையில், நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்கள் 2022 ஏப்ரலில் ஒருதலைப்பட்சமாக வெளிநாட்டுக் கடன் பெறுவதை நிறுத்தியிருந்ததுடன், 4 வருட காலத்திற்குள் 8 தவணைகளாக கிடைக்கப்பெறவிருந்த 3 பில்லியன் டொலர்கள் வரையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதிகளுக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் நுழைந்திருந்தனர்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன் ஆகியவை நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஏற்ப மறுசீரமைப்பு செயல்முறை மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தாமதிப்பு மற்றும் கடினமான தன்மை காரணமாக, நாடு மேலதிகச் செலவுகளைச் செய்ய வேண்டியிருந்ததுடன் மக்கள் மீதான அதிக சுமை அதிகபடுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பின்னர், சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு அமைய, அப்போதைய நிலைமைகளின் நன்மை, தீமைகள் என்ற இரண்டையும் கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் நலனுக்கான மாற்றீடுகளுடன் அரசாங்கம் முன்னோக்கி பயணிக்கிறது.
அதன்படி, வேலைத்திட்டத்தின் அளவுகோள் மற்றும் அரச வருமான வழிமுறைகளுக்கு அமைய, உரிய தலையீடு மற்றும் காலோசிதமான முறையில் வசதிகளை வழங்குவதன் ஊடாக, 2024 நவம்பர் 26 ஆம் திகதி மூன்றாவது மீளாய்வில் பணிக்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை எட்ட முடிந்தது. சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை அனுமதிக்கு முன்னதாக, EFF இன் அடுத்த தவணையைப் பெற்றுகொள்வதற்கு அரசாங்கம் உரிய பங்குதாரர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.
கடன் மறுசீரமைப்பு
இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மறுசீரமைப்பை உள்ளடக்கியுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு 2023 ஜூலை மாதமளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் உள்ளடங்கும் பலதரப்பு கடன் மறுசீரமைப்பு பல்வேறு அடிப்படைகள் மற்றும் தர்க்கங்களுக்கு அமைய கடன் வழங்குநர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் மற்றும் தனியார் சர்வதேச பிணைமுறிகள் (ISB) என்பன வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உள்ளடங்கும்.
இருதரப்புக் கடன்
17 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு (OCC), சீனா எக்சிம் வங்கி, சீனா அபிவிருத்தி வங்கி, ஏனைய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான (குவைட், சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான்) மற்றும் ஏனைய வணிக கடன் வழங்குநர்களுடன் இணைந்து இருதரப்பு கடன் தொடர்பிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு 2024 ஜூன் மாதத்தில் உரிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குறித்த தீர்வுகளின் (CoT) ஒப்பீட்டு நிலையை உறுதிசெய்து, இணக்கம் காணப்பட்ட கட்டமைப்பிற்குள் சீனாவுடனான கடன் 2023 ஒக்டோபர் மாதத்திற்குள் மறுசீரமைக்கப்பட்டிருந்தது. ஏனைய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான (குவைட், சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான்) உள்ளிட்ட நாடுகளுடனான கடன் அண்ணளவாக 300 டொலர் மில்லியன்களாக காணப்படுவதுடன், இது ஏனைய முழுக் கடன் மறுசீரமைப்பு செய்தலில்1% ஆக காணப்படுகிறது. ஏனைய அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் இணங்கிய கட்டமைப்புக்குள் மறுசீரைப்புச் செய்ய தற்போதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச பிணைமுறி கடன் வழங்குநர்கள்
மிகவும் தாமதமான சர்வதேச பிணைமுறி கடன், மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள், இணக்கமின்மை, முன்மொழிவுகளை மாற்றுதல், DSA மற்றும் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கைகளுக்கு இசைவாக மாற்றுதல் உள்ளிட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளைக் கடந்துள்ளது.
இறுதியாக 2024 செப்டம்பர் 19 ஆம் திகதி கொள்கை அடிப்படையில் (AIP) ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இணக்கம் காணப்பட்டது. Ad Hoc Group (AHG) மற்றும் Local banking consortium இனால் கடந்த காலங்களில் செலுத்த வேண்டியிருந்த 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட சர்வதேச பிணைமுறிக் கடன்களில் 14.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
காலோசிதமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் புதிய வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய அரசாங்கம் நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கான வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. நிதி ஸ்திரத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சுயாதீனமான மூன்றாம் தரப்பினரால் பாராட்டப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப தரப்படுத்தல்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த வெற்றிக்காகு சரியான முறையில் வழங்கப்பட்ட முன்னுரிமை மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் ஆகியன முக்கிய காரணங்களாகியுள்ளன. இவ்வாறாக, இலங்கை மக்களுக்கு "வளமான நடு - அழகான வாழ்வு" இனை ஏற்படுத்திக்கொடுப்பதை நனவாக்க அரசாங்கம் தனது மறுசீரமைப்புச் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்தது. இதன்படி, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தீர்மானமிக்க முயற்சியாக 2024 டிசம்பர் 20 ஆம் திகதி நடைமுறையில் உள்ள பிணைமுறி பரிமாற்றத்திற்காக புதிய பிணைமுறிகளை வௌியிடுவதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன், அதனை திறம்பட செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
2. சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான வசதிகளை வழங்கல்
2.அ.1. பராட்டே சட்ட சலுகைகளை நீடித்தல்
பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திகதியை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் காணப்படுவதை உறுதிசெய்ய, அரசாங்கம் பங்குதாரர் குழுக்களுடன் இணைந்துகொண்டுள்ளது. இதன் பலனாக, பராட்டே சட்டத்தின் அமுலாக்கம் இப்போது 2025 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2.ஆ.2.நிவாரணப் பொதி
கால நீடிப்பினால் மாத்திரம் வியாபாரங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. மத்திய வங்கியின் தரவுகளின்படி, 25 மில்லியனுக்கும் குறைவான கடன் மூலதனத்தைக் கொண்ட கடனாளர்களில் 99% ஆனோர் வங்கிகளுடன் கலந்தாலோசித்து தங்களது கடன்களை செலுத்தும் முறைக்கு இணங்க 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 25 - 50 மில்லியன்கள் வரையிலான கடன்கள் கொடுக்கல் வாங்கல் செய்தோருக்கும் 9 மாதங்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனை கொடுக்கல் வாங்கல் செயற்பாட்டாளர்களுக்கும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியினால் செயற்படுத்தப்படும் இந்த நிவாரணப் பொதியில், குறிப்பாக குறைந்த வட்டி விகிதங்கள், மீள் செலுத்தும் காலம் நீடிப்பு, கடன் தரப்படுத்தலில் தளர்வு மற்றும் மதிப்பீட்டு சர்ச்சைகளை தீர்ப்பதற்கு வெளிப்படையான பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் கடன் பெறுபவர்களுக்கு பெருமளவில் நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண நடவடிக்கைகள், பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
2. ஆ. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவி
2.ஆ.1. அஸ்வெசும குடும்ப பிள்ளைகள்.
சமூகத்தில் ஆபத்திற்குட்படக்கூடிய தொகுதியிலிருக்கும் பெற்றோர்களுடைய பிள்ளைகளின் கல்வி மீதான சுமையை குறைக்கும் வகையில் எதிர்வரும் பாடசாலை தவணைக்கு அத்தியாவசியமான பாடசாலை புத்தகங்கள் மற்றும் எழுதுவினைபொருட்கள் கொள்வனவு செய்வதற்கு ஒரு பிள்ளைக்கு 6,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்காக இந்த சலுகை விரைவில் ஆரம்பிக்கப்படும்.
2.ஆ.2. அஸ்வெசு பெறாத குடும்பங்களின் பிள்ளைகள்
தற்போது அஸ்வெசும கிடைக்காத, ஆனால், நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சின் பரிந்துரைக்கமைய இந்த சலுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டினை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதோடு, பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற மற்றும் இந்த உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தகுதியான சகல பிள்ளைகளுக்கும் இந்த சலுகையை வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொழில் அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் - கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
பிரதி நிதி அமைச்சர் - கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும