தலைமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான பண்டாரநாயக்க அகடமியின் பயிலுனர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வு நேற்று (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன மற்றும் சட்டவாக்க சேவைகள் திணைக்களப் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களப் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா அகியோர் வளவாளர்களாக இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது குழுக்களை ஸ்தாபித்தல், உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் குழுக்களின் செயற்பாடுகள், ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்படும் வரையான பாராளுமன்றத்தின் பணிகள், சட்டமூலமொன்று சட்டமாக மாறும் வரையான செயற்பாடுகள், பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், பாராளுமன்ற நிர்வாகக் கட்டமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் வளவாளர்கள் விரிவான முறையில் விடயங்களைத் தெளிவுபடுத்தினர்.
அத்துடன், கலந்துரையாடல் வடிவில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் தலைமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான பண்டாரநாயக்க அகடமியின் பயிலுனர்கள் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டன. இதன்போது பயிலுனர்கள் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் செயலமர்வில் தலைமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான பண்டாரநாயக்க அகடமியின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.