பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மே 25 முதல் 27 வரை யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பிரதேசங்களில் பல களப் பயணங்களை மேற்கொண்டு, அப்பகுதிகளின் பாதுகாப்பு நிலைமை, செயற்பாட்டு பொறுப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது, அவர் யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகம் (SFHQ-J) மற்றும் வன்னி பாதுகாப்புப் படை தலைமையகம் (SFHQ-Wanni) ஆகிய இடங்களில் சிரேஷ்ட முப்படை அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் உரையாற்றுகையில், நீண்டகால பிராந்திய நிலைத்தன்மைக்கும் சமூக நலனுக்கும் அடிப்படை ஆதாரமாக பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுதல் அமைகின்றது என்பதை வலியுறுத்தினார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக முப்படைகள், சிவில் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் தொடர்ந்தும் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பான, அமைதியான மற்றும் சட்டபூர்வமான சூழலை பேணுவதன் மூலம், இராணுவம் குற்றச்செயல்களைத் தடுக்கக்கூடிய முன்கூட்டிய பாதுகாப்பு நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதோடு, பாதுகாப்பு அமைப்பின் மீதான பொதுமக்களின் நீடித்த நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி அவர்களின் சார்பிலும் தனது சார்பிலும், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தேசிய நெருக்கடிகளின் போது அவர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை மற்றும் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க எடுத்த துரிதமான நடவடிக்கைகளை அவர் பாராட்டினார்.
தெளிவான ஊழலற்ற கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்முறை முன்னேற்ற அளவுகோல்கள் மூலம், ஆயுதப்படைகளை தொழில்முறை திறன்களும் பல்துறை நிபுணத்துவங்களும் கொண்ட அமைப்புகளாக மாற்ற அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம், படையினரின் திறமைகளை மேம்படுத்தி, அவர்கள் சமூகத்தில் பொருளாதார அடித்தளத்துடன் மதிப்புமிக்க தொழில்முறை நிபுணர்களாக உருவாகும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
இந்த இலக்குகளை அடைவதற்காக ஏற்கனவே பல முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவற்றில், ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் பணிகளில் அதிகளவிலான பங்கேற்பு, ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவிருக்கும் முன்னாள் படைவீரர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட “Warriorpreneurship” திட்டம், மேலும் ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவிருக்கும் கடற்படை உறுப்பினர்களுக்கு வணிகக் கடற்படைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான தொடர்புடைய தரப்புகளுடனான ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.
அதற்கு மேலாக, போரில் உயிரிழந்த, காணாமல் போன அல்லது செயற்பாட்டின்போது ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் அவர்களின் சார்ந்திருப்போருக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான அனுமதியைப் பெறுதல் ஒரு முக்கிய சாதனையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது நீண்டகாலமாக நிலவி வந்த சுற்றறிக்கைகள் மற்றும் ஒழுங்குவிதிகளின் முரண்பாடுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்க உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
SFHQ-J இல் நடைபெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தளபதி, வடக்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி மற்றும் பிராந்திய கட்டளைகளின் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வன்னி பாதுகாப்புப் படைகளின் தளபதி, 56ஆவது காலாட்படை பிரிவின் பொதுத்தளபதி (GOC), வடமத்திய கடற்படைப் பிராந்தியத் தளபதி மற்றும் அதற்குரிய செயற்பாட்டு பொறுப்புப் பிராந்தியத்தில் (AOR) பணியாற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


