மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சானது, தொழில்முனைவோர் மேம்பாட்டின் மூலம் பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ், விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய பொருளாதார நிலையில் உள்ள பெண்களை இலக்காகக் கொண்ட திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது.
இதற்கு இணையாக, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ், "பெண்களின் மேம்பாட்டை இலக்காகக் கொண்ட திட்டத்திற்காக" 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடுத்தர அளவிலான பெண் தொழில்முனைவோரை உயர்மட்ட பெண் தொழில்முனைவோராக மாற்றுதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், பொது-தனியார் பங்காளித்துவத்தின் கீழ் நடுத்தர வருமானம் பெறும் பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துதல், தொழிலற்ற இளம் பெண்களை தொழில்முனைவோராக ஊக்குவித்தல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுதல் போன்ற முடிவுகளை இலக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கமைய, பயனாளிகள் இரு பிரிவுகளின் கீழ் அடையாளம் காணப்பட்டு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் ஒரு தொழில்முனைவோராக அவர்களை உருவாக்குதல் ஆகிய இரு நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"திவி சரணி" (Divi Sarani) மற்றும் "திரிய மங் பெத" (Diriya Mang Petha) ஆகிய திட்டங்களின் மூலம் கணவனை இழந்த பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், தோட்டத் துறை, கடற்றொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களும் உள்வாங்கப்படுவதுடன், பேரிடர்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு உள்ளானவர்கள் மற்றும் முறைசாரா நுண்நிதி கடன் திட்டங்களினால் பாதிக்கப்பட்ட பெண்களை உள்வாங்குவதற்காக விசேட திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.


